மட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறி நிவாரணம் வழங்கலில் ஈடுபட்ட 6 பேருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு- கரடியனாறு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில், நிவாரண பொதி வழங்கலில் ஈடுபட்ட 6 பேரையும் எதிர்வரும் ஜுன் 4 ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுவிஸ் நாட்டிலுள்ள தமிழ் நீலப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின் அனுசரனையுடன் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்ட உணவுப் பொதி வழங்கல் என பொறிக்கப்பட்ட பதாதையுடன் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் கடந்த மாதம் 18 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில் நிவாரண பொதிகளை 6 பேர் வழங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கு சென்ற இராணுவத்தினர், அவர்களை கொரோனா சுகாதார முறைகளை பின்பற்றாமல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டமைக்காகவும் மற்றும் தமிழீழம் வரை படம் பொறிக்கப்பட்ட படம் கொண்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பதாதையை பயன்படுத்தி செயற்பட்டமைக்காகவும் சந்தேகத்தின் பேரில் குறித்த 6 பேரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்தவர்களை, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியப்போது கடந்த 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதன் பின்னர் கடந்த 29ஆம் திகதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியப்போது, எதிர்வரும் ஜுன் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தலிங்கம் தனுஷன், சுந்தரமூர்த்தி முரளிதரன், சகாயதாஸ லிவேணிதாஸ், ஆயித்திமலையைச் சேர்ந்த சிவஞானம் சிவசங்கர், கொக்கட்டிச் சோலையைச் சேர்ந்த மகேந்திரராசா சந்திரகுமார், வெல்லாவெளியைச் சேர்ந்த மகேந்திரன் பிரதீபன் ஆகிய 6 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை