கிளிநொச்சியில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு
கிளிநொச்சியில் 84.4 மில்லியன் ரூபாய் செலவில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறித்த சுத்திகரிப்பு நிலையம் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு இன்று கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி, கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேசங்களில் அகற்றப்படும் திண்மநீர்க்கழிவு, குறித்த நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு அவை மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. இதில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
குறித்தநிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் ரணதுங்க மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை