கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனாவை எமது மருத்துவர்கள் வீழ்த்துவர் – மோடி நம்பிக்கை
கொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் அதனை வீழ்த்துவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்ளூரில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் வெல்ல முடியாதவர்கள். கண்ணுக்கு தெரியாத எதிரிக்கும் வெல்ல முடியாதவர்களுக்கும் இடையே நடக்கும் போரில் நமது மருத்துவ ஊழியர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
எதிர்வரும் காலங்களில் இந்த பல்கலைக்கழகம் சிறப்பான புதிய உயரங்களை எட்டும் என நம்புகிறேன். உலகளாவிய தொற்றுநோய் மட்டும் இல்லாதிருந்தால், இந்த நாளில் நான் உங்களுடன் பெங்ளூரில் இருக்கவேண்டும் என விரும்பினேன்.
வைரஸ் பரவிய நேரத்தில், உலகமே நம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விஞ்ஞான சமூகத்தை நம்பிக்கையுடனும் நன்றியுடனும் பார்க்கிறது. உங்களிடமிருந்து கவனிப்பு மற்றும் குணப்படுத்துதல் இரண்டையும் உலகம் எதிர்பார்க்கிறது’ என மோடி தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை