ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி மத்திய லண்டனிலும் போராட்டம்: ஐந்து பேர் கைது!

அமெரிக்காவில் கொல்லப்பட்ட நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, மத்திய லண்டன் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

‘ஜஸ்டிஸ் ஃபார் ஜோர்ஜ் ஃபிலாய்ட்’ (ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதி வேண்டும்) என்று கோஷம் எழுப்பியவாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான மக்கள் லண்டன் வீதிகளில் அணிவகுத்து சென்றனர்.

டிராஃபல்கர் சதுக்கத்திலும் (Trafalgar Square) பாட்டர்ஸியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியேயும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பிரித்தானியாவின் பிற இடங்களில், நூற்றுக்கணக்கானவர்கள் மான்செஸ்டர் நகர மையத்தின் வழியாக ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்று கோஷமிட்டனர். இதேபோன்ற போராட்டம் கார்டிஃப் நகரிலும் நடந்தது.

லண்டன் போராட்டக்காரர்கள் ‘இனவெறிக்கு இடமில்லை’, ‘என்னால் மூச்சுவிட முடியாது’ என எழுதப்பபட்ட பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஏற்பட்ட மோதலில் 5 பேரை பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் 17 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் கொவிட்-19 சட்டத்தை மீறியதற்காகவும், இருவர் பொலிஸைத் தாக்கியதற்காகவும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.