நாட்டின் அரசமைப்புக்கு இணங்க, நாடாளுமன்றமொன்று இல்லாமல் செயற்பட முடியாது – ரணில்
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்ற உண்மைத் தன்மையை, அரசாங்கம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த நாட்டின் அரசமைப்புக்கு இணங்க, நாடாளுமன்றமொன்று இல்லாமல் செயற்பட முடியாது. இது அரசமைப்புக்கு முரணான ஒன்றாகும்.
அத்தோடு, தேர்தல்கள் ஆணைக்குழு, மக்களின் உயிருக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாத வகையில், உரிய ஆலோசனைக்கு அமைவாகவே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கை எடுக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையில், இந்தத் தேர்தல் ஏனைய தேர்தல்களைவிட வித்தியாசமாகும். மக்களின் வாழ்வாதாரம் இன்று முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அத்தியவசியப் பொருட்களின் விலைகள் மட்டும் உயர்ந்துக் கொண்டே செல்கிறது. நிவாரணப் பணிகளும் அரசியல் பேதங்களுடன்தான் மேற்கொள்ளப்படுகிறது.
உலகில் எந்தவொரு நாட்டிலும் நடக்காத செயற்பாடுகளைத் தான் இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது. கொரோனா நிலவரத்திற்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதை மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
இவற்றை ஒழிக்க கூடாது. இவற்றைத் தெரிந்துக்கொள்ளக்கூடிய உரிமை உள்ளது. இதற்காக நாமும் எம்மால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை