தி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு
தி பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மத்திய வங்கியினால் இந்த விடயம் தொடர்பாக பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதற்கு அமைய 97 வீதமான வைப்பாளர்களின் பிரச்சினை முழுமையாக தீர்த்து வைக்கப்படவுள்ளதாக கூறினார்.
இந்த தொகையை விட அதிக நிதியை வைப்பிலிட்ட 3 வீதமானவர்கள் உள்ளதாகவும் அவர்களின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான இயலுமை தற்போது இல்லை எனவும் அவர்களுக்கான தீர்வும் விரைவில் வழங்கப்படும் எனவும் பந்துல குணவர்தன இதன்போது தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, ETI நிறுவனத்தில் வைப்பிலிட்டவர்களுக்கான நிதியை மீள செலுத்துவதற்கான நடவடிக்கை இந்த செயற்றிட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதில் வைப்பிலிட்டவர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபா கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அதில் வைப்பிலிட்டவர்களின் சங்கம் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் அதில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் காணப்படும் எந்தவொரு நிதி நிறுவனத்திலும் அதிகபட்சமாக 6 இலட்சம் ரூபாய் மாத்திரமே வைப்பிலிடுவதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதனால், நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்பிலிடுவோர் தங்களின் பாதுகாப்பிற்கான விடயங்களை அறிந்துகொள்வதோடு, அதிகபட்சம் 6 இலட்சம் ரூபாய் வரை மாத்திரமே வைப்பிலிட முடியும் என்பதை அனைத்து வைப்பாளர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை