தமிழர் தாயகத்தில் மக்களை அச்சுறுத்திய ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் படுகொலைகள்!

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது.

இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபடுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் வரதராஜப்பெருமாளின் ஆலோசனையுடன் மண்டையன் குழு என்ற கொலைகாரக் குழு உருவாக்கப்படுகின்றது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனாலும் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் தலையைச் சீவிக் கொல்வதானால் மண்டையன் குழு என வடக்கிலும் கிழக்கிலும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குழு அழைக்கப்பட்டது.

1988 டிசம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் துணையோடு நடத்தப்பட்ட போலியான தேர்த்தலில் வரதராஜப்பெருமாள் வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராகிறார்.

1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இந்திய அடியாள் படை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக வரதாராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றனர்.

சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மிரட்டல் கலந்த உரையாற்றுவார். இந்திய இராணுவத்தை எதிரியகக் கருதிய பலருக்கு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய இடங்களில் மண்டையன் குழு இயங்கி வந்தது.

1989ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கொக்கோ கோலா போத்தல் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.

அச்செய்தி முரசொலி பத்திரிகையில் மட்டுமே வெளியாகியது. இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கோலா போத்தல் மீட்கப்பட்டது. அந்த இளைஞர் சில தினங்களுக்கு முதல் சிலரால் கடத்தி செல்லப்பட்டிருந்தார் என இறுதியில் எழுதப்பட்டிருந்தது.

அந்த இளைஞரை கடத்தியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் என பின்னர் பலருக்கும் தெரியவந்தது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தை சுட்டுக்கொல்வதற்கு திட்டமிட்டனர்.

முரசொலி பத்திரிகை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்து வந்த படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தி வந்தது.

அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்திய இராணுவத்துக்காகவும் தங்கள் மீது புலிகள் மேற்கொள்கின்ற தாக்குதலுக்காகவும் பழிக்குப் பழி வாங்குகின்ற படுகொலைகளை முன்னின்று நடத்தி வந்தார்.

புலி ஆதரவாளர்கள் புலிகளுக்கு உதவியவர்கள், புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எனப் பலர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர். திருச்செல்வத்தையும் கடத்தி கொலை செய்வதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் திட்டமிட்டது.

எஸ்.திருச்செல்வம் அவர்களைக் கடத்துவதற்காக அவருடைய வீட்டுக்கு மண்டையன் குழுவினர் சென்ற போது திருச்செல்வம் வீட்டின் பின் பக்கத்தால் தப்பியோடிவிட்டார். அதனால் அங்கிருந்த அவரது மகன் அகிலனை மண்டையன் குழுவினர் கடத்திச் சென்றனர். திருச்செல்வம் தங்களிடம் வந்தால் மகனை விடுவிப்போம் என்று எச்சரித்துச் சென்றனர். தான் அவர்களிடம் சென்றால் கொல்லப்படுவேன் என்பதை நன்கு அறிந்திருந்த திருச்செல்வம் தான் செல்லாவிட்டால் தன் மகனைக் கொல்வார்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்நிலையில் மண்டையன் குழு அகிலனை படுமோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கியது. அகிலனின் மலவாசலினூடாக சோடாப் போத்தலை செலுத்தினார்கள். அவருடைய நகங்களைப் பிடுங்கினார்கள். மறுநாள் அகிலன் பிணமாக வீதியில் வீசப்பட்டார்.

எஸ்.திருச்செல்வம் தம்பதிகளுக்கு கனடிய அரசு அரசியல் தஞ்சம் வழங்கி அவர்களை கனடாவுக்கு அழைத்தது. திருச்செல்வம் தனது மகனின் கொலை தொடர்பாக கனடிய அரசுக்கு வழங்கிய சாட்சியத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரனைக் குற்றம்சாட்டி இருந்தார். அதனால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவருக்கு விசா வழங்க கனடிய அரசு மறுத்து வருகின்றது.

இந்த இயக்கங்கள் மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளைத் திருப்பிய சம்பவங்கள் எண்ணிலடங்கா. அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் சித்திரவதைகளிலும் படுகொலைகளிலும் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன. ஒருவரைக் கொல்வதற்கு எவ்வித காரணங்களும் கொடுக்கப்பட வேண்டிய தேவையே இருக்கவில்லை.

திருச்செல்வத்தின் மகன் அகிலனை நான் நன்கு அறிந்திருந்தேன். அமைதியான சுபாவம் கொண்ட படிப்பு விளையாட்டு என சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவன்.

கல்லூரியின் மிகத் திறமையான மாணவனான அகிலன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் அகிலன் நான்கு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தார். தான் கல்வி கற்ற கல்லூரியின் கிரிக்கட் குழுவின் தலைவனாகவும் அகிலன் விளங்கினான்.

மாணவன் அகிலன் திருச்செல்வனின் கொலை ஒரு போதுமே நியாயப்படுத்தப்பட முடியாத படுகொலை. தகப்பனுக்காக ஒருபோதுமே மகனைக் கடத்திப் படுகொலை செய்தது யாராகவிருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத படுகொலை.

அதேபோன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராகவும் பிரஜைகள் குழு துணைத்தலைவராகவும் இருந்த வணசிங்க மற்றும் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா சந்திரா பெர்ணாண்டோ ஆகியோரின் கொலைகளையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே செய்தது.

வந்தாறுமூலையில் பிறந்த வணசிங்க அவர்கள் 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டவர்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்த வணசிங்க அவர்கள் இந்திய இராணுவ காலத்தில் தமிழ் மக்களின் பாகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் உறுப்பினராகவும், பின்னர் அதன் துணைத்தலைவராகவும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தார்.

அநீதியும் உரிமை மீறலும் எங்கு நடக்கிறதோ அங்கு சென்று அவற்றைத் தட்டிக்கேட்டு நியாயம் தேடும் ஒரு தலைவனாக அவர் விளங்கினார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்த அட்டூழியங்கள் படுகொலைகளை தட்டிக்கேட்டார்.

இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் இவரை படுகொலை செய்ய திட்டமிட்டது. 1989ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியில் அவர் வீட்டில் இருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்த இருவர் அங்கு சென்றனர். அவருடன் பேச வேண்டும் என்றனர். வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒருவர் வணசிங்காவை சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் மட்டக்களப்பில் புரிந்த படுகொலைகளில் வணபிதா சந்திரா பெர்னாண்டோ அடிகளாரை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் முக்கியமானதாகும்.

1988ஆம் ஆண்டு யூன் 6ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் உள்ள புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவருமான வணபிதா சந்திரா பெர்னாண்டோ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேவாலயத்திற்குள் வைத்து தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிதா சந்திரா அவர்கள் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் பல. ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் செய்யும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தி வந்தார்.

அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முதல் மட்டக்களப்பு நகரில் வைத்து சுகுணா என்ற தமிழ் இளம் பெண்ணையும் ரிபாயா என்ற முஸ்லீம் இளம் பெண்ணையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் கடத்தி சென்றனர். இவர்களை வாவிக்கரை வீதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் வைத்து கூட்டாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். வணபிதா சந்திரா இவர்களை மீட்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய இராணுவ கட்டளை தளபதி ஒருவருடன் தொடர்பு கொண்டதன் பின் சுகுணா என்ற தமிழ் பெண் மீட்கப்பட்டார். ஆனால் ரிபாயா என்ற முஸ்லீம் பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து விட்டனர்.

இந்த விடயத்தை வணபிதா சந்திரா மனித உரிமைகள் அமைப்புக்கள் மட்டத்திற்கு கொண்டு சென்றார். இதற்கு பழிவாங்குவதற்காகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் வணபிதா சந்திரா அவர்களை படுகொலை செய்தது.

அதேபோன்றுதான் 1989ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரஜைகள் குழு தலைவராக இருந்த சிவானந்தசுந்தரம் அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் சுட்டுக்கொன்றது. யாழ்ப்பாணம் அரியாலையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு பருத்தித்துறை நோக்கி சென்ற போது அவரை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.