அரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பகுதியில் உள்ள வடிச்சல் பகுதிகளை ஏறாவூர் நகரசபை நிரப்பிவருவது தொடர்பில் ஆராயச்சென்ற நீர்பாசண திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஏறாவூர் முஸ்லீம் பிரிவு மற்றும் ஏறாவூர்-5 தமிழ் பிரிவு எல்லையில் உள்ள வயல் நிலங்களை குப்பை, மண் இட்டு நிரப்பும் செயற்பாடுகளை ஏறாவூர் நகர சபை முன்னெடுத்து வருகிறது.

உறுகாமம் தொடக்கமுள்ள குளங்களில் இருந்து வெளியேறும் வடிச்சல் நீர், மழைபெய்யும் போதும் ஊருக்குள் புகும் வெள்ளநீர் மற்றும் கரையோரத்தில் உள்ள வயல் நிலங்களில் சேரும் வெள்ளநீர் என்பன வெளியேறும் வழிகள் கூட இப்போது நிரப்பப்பட்டுள்ளன.

இதனால் வயல் நிலங்கள் மூழ்கி விவசாயம் அழிவடைவதோடு கரையோர கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்படைவது தொடர்பில் பல விவசாய அமைப்புக்கள் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கு கடிதங்கள் வழங்கி இருந்த போதிலும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு வயல் நிலங்களை மண் இட்டு நிரப்பும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலைமை தொடர்பாக விவசாய அமைப்புக்கள் நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதேச செயலாளர், சுற்றாடல் அதிகாரசபை போன்றவற்றிக்கு அறிவித்ததன் பிரகாரம் குறித்த பகுதியை அதிகாரிகள் நேற்றைய தினம் பார்வையிடச் சென்றுள்ளனர்.

இவ் விஜயம் தொடர்பாக சம்பந்தப்படட சகல அதிகாரிகளுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கமநல அமைப்பினால் அறிவித்தல்களும் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி அதிகாரிகள் குறித்த இடத்தை பார்வையிடல் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் திடீரென அங்குவந்த ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளர் அநாகரிகமான, இனவாதத்தை தூண்டும் வார்த்தைகளால் அதிகாரிகளையும் விவசாய பிரதிநிதிகளையும் தூசித்ததோடு விவசாய பிரதிநிதிகளை தாக்கவும் செய்துள்ளார்.

மேலும் பிரதேச சபை தவிசாளருடன் வந்திருந்த பிரதேச சபை ஊழியர்களும் தாக்க முற்பட்டதோடு. ‘நீங்கள் எனது பிரதேசத்துக்குள் நிற்கிறீர்கள்’, நான் நினைத்தால் உங்களை எதுவும் செய்யலாம்’, ‘நீங்கள் ஒருவரும் வீடு போய் சேர மாட்டீர்கள்’ என்றும் அதிகாரிகளை கடமையை செய்யவிடாது அச்சுறுத்தியுள்ளார்.

அந்த நேரத்தில் குறித்த பகுதிக்கு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இனகலவரம் ஒன்று இடம்பெறா வண்ணம் அரச அதிகாரிகளையும் விவசாய அமைப்பு பிரதிநிதிகளையும் ஆசுவாசப்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து அரச அதிகாரிகாரிகள் தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாகவும், விவசாய அமைப்பு பிரதிநிதிகள் தவிசாளரால் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அங்கு சமூகமளிக்காது இருந்தால், இவ்விடயம் ஒரு இன வன்முறைக்காக உருவெடுத்திருக்கும் என்றும் இந்த விடயம் தொடர்பாக முன்னாள் அரசியல்வாதிகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்த போதிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனை தவிர வேறு எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. என்றும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.