உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்திடம் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா?
இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கிண்ண தொடரில், பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்வதற்காக, இந்தியக் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே தோற்றதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியா இராணுவ வாகனங்கள் மீது நடத்திய குண்டுத்தாக்குதலில், 40இற்கும் இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனால், அப்போது எதிர்வரவிருந்த 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில், பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் போட்டியை கைவிட வேண்டுமென இந்தியா தரப்பில் பலரும் வலியுறுத்தினர். இதில் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் அடங்குவர்.
ஆனால் அதனையும் கடந்து உலகக்கிண்ண தொடரில் இந்தியா அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டு டக்வத் லுயிஸ் முறைப்படி 89 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
எனினும், பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்ய இந்தியக் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே தோற்றதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அப்துல் ரசாக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”நாங்கள் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தோம், எங்கள் அனைவருக்கும் அதே உணர்வுதான் ஏற்பட்டது. ஒரு நல்ல பந்து வீச்சாளர் அவரது நிலைப்பாட்டில் பந்து வீசவில்லை. ஓட்டங்களை அதிகம் கொடுக்கிறார்.
எங்களுக்கு சந்தேகமே இல்லை. பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்யவே, இங்கிலாந்துடன் இந்தியா வேண்டுமென்றே தோற்றது. இதற்காக இந்திய அணிக்கு ஐ.சி.சி. அபராதம் விதிக்க வேண்டும்” என கூறினார்.
இதேவேளை, உலகக்கிண்ண நாயகன் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், ‘உலக்கிண்ண தொடரின் பயணம்’ குறித்து எழுதிய புத்தகத்தில், இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய வீரர் டோனியின் விளையாட்டு இலக்கில்லாமல் இருந்ததாகவும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் இணைப்பாட்டம் மர்மமாக இருந்ததாகவும் அவர் எழுதியிருந்தார்.
அத்துடன், அரையிறுதியில் பாகிஸ்தான் விளையாடுவதை இந்தியா விரும்பவில்லை என சில மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் தன்னிடம் கூறியதாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அஹ்மது தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை