வடக்கு, கிழக்கும் பௌத்த பூமி இங்கு இராணுவமே பாதுகாப்பு தமிழர்கள் புலம்புவதில் பயனில்லை என்கிறார் ஞானசாரர்

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த – சிங்களவர்களின் பூமிதான். அதாவது ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த – சிங்கள நாடு. தமிழர்கள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்துப் புலம்பிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை .”

– இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

“வடக்கு, கிழக்கை நாம் பாதுகாக்க வேண்டுமெனில் இங்கு இராணுவத்தைத்தான் நிலைநிறுத்த வேண்டும். அவர்களின் நேரடிக் கண்காணிப்பில்தான் அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெறும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியை நாம் வரவேற்கின்றோம். பெரும்பான்மை பௌத்த – சிங்களவர்களின் வாக்குகளினாலேயே அவர் நாட்டின் தலைவாராகத் தெரிவுசெய்யப்பட்டார். இந்தநிலையில் அவரின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

நீதியின் வழியிலும், அரசமைப்பை மதித்தும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச செயற்படுகின்றார். இதை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தனிப் பௌத்த – சிங்களத் தலைவரை நாம் தெரிவு செய்தது போல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிப் பௌத்த – சிங்கள பெரும்பான்மை அரசை நாம் நிறுவுவோம். எனவே, தமிழர்கள் விரும்பினால் எமது கொள்கைகளை ஏற்று எம்முடன் இணைந்து பயணிக்கலாம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.