மட்டு.தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி போராட்டம்
மட்டக்களப்பு- தாழங்குடாவிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரியும் குறித்த கல்லூரிக்கு அட்டாளைச்சேனை முதல்வரை இடமாற்றியதை இடைநிறுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டமொன்று இன்று (சனிக்கிழமை) பகல் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியினை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம், கல்வியில் கல்லூரிக்கு முன்பாக நடைபெற்றது.
மேலும் இப்பகுதிகளிலுள்ள தமிழர்களின் கலாசாரத்தினையும் பாரம்பரியத்தினையும் கொண்ட தேசிய கல்வியியல் கல்லூரிக்கு, முதல்வராக தமிழரே நியமிக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
1992ஆம் ஆண்டு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழர் ஒருவரே நியமிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று இந்த மாற்றம் வேறு ஒரு இனத்தவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
‘இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் அல்ல எமது கலாசாரத்தினை பாதுகாக்கவே முற்படுகின்றோம்’, ‘மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்காதே’ போன்ற சுலோசகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரிடம் இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கையெடுப்பதாக அமைப்பாளர் சந்திரகுமார் உறுதியளித்தார்.
கருத்துக்களேதுமில்லை