மாத்தளையில் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு
மாத்தளை – மஹவெல – ஹதமுனகல பிரதேசத்தில் மின் கம்பிகள் அறுந்து பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விற்பனைக்காக பலா உள்ளிட்ட உணவுப்பொருட்களை சேகரித்துக் கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் பாரவூர்தியின் மீது மின்கம்பிகள் அறுந்து வீழந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலா மரத்தின் கிளையொன்று உடைந்து வீழ்ந்ததையடுத்து மின்கம்பி அறுந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பாரவூர்தியில் மூவர் பயணித்துள்ளதுடன், இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள நிலையில், மற்றையவர் பாரவூர்தியில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செலகம மற்றும் மஹவெல பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை