தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைப்பது உறுதி ‘மொட்டு’ அணி நம்பிக்கை…

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிட முடியாது. கணிசமான அளவு ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் இருந்து அந்த அரசின் மீது தமிழ் மக்கள் மத்தியில் தவறான குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மிகத் துரிதமாக அபிவிருத்தியை முன்னெடுத்தார். தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் தேவைகளுக்காகப் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நல்லாட்சி அரசை ஸ்தாபித்தார்கள்.

நல்லாட்சி அரசின் பயனை எவரும் பெற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் கடந்த அரசில் பாரிய நெருக்கடிகளுக்கு  உட்படுத்தப்பட்டார்கள். தேசிய பாதுகாப்பு அரசியல் மயப்படுத்தப்பட்டமையால் பாரிய விளைவுகள் நாட்டில் ஏற்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேசிய பாதுகாப்புக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்குவார். நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய பாதுகாப்பு, துரித அபிவிருத்தி ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிபெறும். தமிழ், முஸ்லிம் மக்கள் இம்முறை நிச்சயம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பலமான அரசில் பங்குதாரர்களாகுவார்கள்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.