உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி தப்பி சென்ற இருவர் கைது
பாறுக் ஷிஹான்-
உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பௌசி மாவத்தையில் கடந்த 18.5.2020 அன்று அப்பகுதி உடுதுணி கடை ஒன்றில் நோன்பு திறக்கும் நேரத்தை பயன்படுத்தி இரு இளைஞர்கள் கடையின் காசு வைக்கப்படும் லாச்சியில் இருந்து ரூபா 85 ஆயிரத்தை களவாடி சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
இம்முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிநடத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா உப பரிசோதகர் ஜனோசன் சார்ஜன்ட் றவூப் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சம்மாந்துறை நகர் பிரதேசத்தை சேரந்த சந்தேக நபர்களான 18 19 வயதுடையவர்கள் சனிக்கிழமை(6) மாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடம் இருந்து பணத்தை களவாடி தப்பி செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் 1 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
மேலும் இச்சந்தேக நபர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று கல்முனை பொலிஸ் நிலைங்களில் பல்வேறு முறைப்பாடுகள் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதான சந்தேக நபர்கள் இன்றைய தினம்(7) சம்மாந்துறை நீதிவான் மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை