வெற்றியை தொடர்ந்து 19 ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் – லக்ஷமன் யாப்பா
பொதுத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்திற்கு 19 ஆவது திருத்தமே மூல காரணம் எனத் தெரிவித்த அவர் இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது என்றும் எனவே சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்லும் முகமாக அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும். துரித பொருளாதார முன்னேற்றம், சிறந்த அரசியலமைப்பு திருத்தம் ஆகியவை தேர்தல் வெற்றியின் பிரதான செயற்பாடாக காணப்படுகிறது. தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி பொருளாதாரம் முன்னேற்றப்படும்.
அரசியலமைப்பின் 19வது திருத்தம் முத்துறைகளுக்குமிடையில் அதிகார செயற்பாடு ரீதியில் முரண்பாட்டை தோற்றுவித்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இலட்சனமாக கருதப்பட்ட 19வது திருத்தத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்துக்கு இத்திருத்தமே பிரதான காரணியாக அமைந்தது. அரசியலமைப்பின் 19வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் முழுமையாக மாற்றியமைக்கப்படும். இன்று ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாகத்தின பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையும் உள்ளது . இதற்கு 19வது திருத்தமே பிரதான காரணம். ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்படும் விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் அரச தலைவருக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான அதிகார முரண்பாடு பல அடிப்படை பிரச்சினைகளுக்கு மூல காரணியாக அமைந்தன.
இந்நிலைமை இன்றும் தாக்கம் செலுத்துகிறது. ஆகவே பலமான அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசியமைப்பின் 19வது திருத்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும்” என கூறினார்.
கருத்துக்களேதுமில்லை