சுயாதீனம் என்ற சொல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது – கெஹலிய
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுலின் கருத்தினால், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் மரியாதை இல்லாது போயுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த அவர், இது மக்களின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்றும் குறிப்பிட்டார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுலின் பேச்சு தொடர்பாக தற்போது பாரிய சர்ச்சை எழுந்துள்ளது.
உண்மையில், இவரது இந்தக் கருத்தினால் இன்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, சுயாதீனம் என்ற பதத்தின் பெறுமையை இழந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.
சுயாதீனம் என்ற சொல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதனையிட்டு நாம் கவலையடைகிறோம். இதுதொடர்பாக நாம் பேச வேண்டும். ஒரு கட்சியின் உறுப்பினராக இல்லாமல் இலங்கையின் பிரஜையாக பேச வேண்டிய கட்டாயம் உள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பாக கடந்த ஆட்சியாளர்கள் மார்த் தட்டிக்கொள்கிறார்கள். ஆனால், சுயாதீன ஆணைக்குழு ஒன்றினால்தான் சட்டத்தை வளைக்கக்கூடிய பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இது அனைவருக்கும் தெரியும். அதேபோல், தற்போது சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இதுதான் மக்கள் இறையாண்மையா? நாட்டின் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் மக்கள் இறையாண்மை இங்கு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று அரசியல் பேச ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிலையில், இனியும் நாம் இதனை சுயாதீன ஆணைக்குழு என்று கூற முடியுமா?“ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை