எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியம் செய்தது – ரணில் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியம் செய்ததன் காரணத்தினாலேயே, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட காலத்திலிருந்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் சம்பிரதாய அரசியலைக் கைவிட்டு, இந்த சவாலை முறியடிக்க ஒத்துழைக்க தயாராக இருந்தன.

பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் எதிர்க்கட்சிகளும் இவ்வாறான செய்தியைத் தான் அந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு வழங்கியிருந்தன.

இந்த நிலையில், நாம் அரசாங்கத்திடம் ஒரே ஒரு கோரிக்கையைத் தான் முன்வைத்தோம். அதாவது, ஒரு நாளைக்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துமாறு கோரியிருந்தோம்.

மார்ச் 24 ஆம் திகதி அலரிமாளிகையில் கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற போதே இந்த கோரிக்கையை நாம் முன்வைத்திருந்தோம். அப்போது, இலங்கையில் 102 கொரோனா தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்தார்கள். ஒரு மரணம் கூட பதிவாகவில்லை.

ஆனால், இன்று நிலைமை அவ்வாறு இல்லை. இதற்கு என்ன காரணம்? அரசாங்கம் எமது கருத்துகளை செவிமடுக்கவில்லை. இதன் விளைவாகத் தான் இந்த நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் அயல் நாடான வியட்நாமில் 350 கொரோனா தொற்றாளர்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு ஒரு மரணம் கூட பதிவாகவில்லை.

அதோபோல், சீனாவுக்கு அயல் நாடான லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளில் 150 இற்கும் குறைவான நோயாளர்களே கண்டுபிடிக்கப்பட்டதோடு, ஒரு மரணம்கூட பதிவாகவில்லை.

ஏன்? அவர்கள் வியட்நாமின் உதவியுடன் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகப்படுத்தினார்கள். நாமும் இதே செயற்பாட்டை மேற்கொண்டிருந்தால் 500 இற்கும் குறைவானவர்களே அடையாளம் காணப்பட்டிருப்பார்கள் என்பதோடு, மே மாதத்துடன் இந்த சவாலை முறியடித்திருக்கவும் முடியும்.

இதற்கான பொறுப்பை அரசாங்கம்தான் ஏற்கவேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.