சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வழமையான போக்குவரத்து சேவைகள்
கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவைகளை இன்று முதல் வழமை போல் முன்னெடுப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு முன்னதாக திட்டமிட்டிருந்ததது.
இந்தநிலையில், கடந்த வாரங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்புரிவோர் இன்றைய தினம் மேல் மாகாணத்திற்கு வருவார்கள் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கிறனர்.
இதற்காக இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான அதிகளவான பேருந்துகளை சேவையில் ஈடுப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சேவையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவளை தூர இடங்களில் இருந்து மேல் மாகாணத்திற்கு வரும் பயணிகளின் நன்மை கருதி 60 – 70 வீதம் வரையான தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே திணைக்களத்தின் அனைத்து அலுவலக ரயில்கள் மற்றும் அஞ்சல் ரயில்களை இன்று முதல் சேவையில் ஈடுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று முதல் மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீள அமுல்படுத்தப்படவுள்ளன. இதன்படி, பேருந்து முன்னுரிமை ஒழுங்கை விதி மொறட்டுவை முதல் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து கண்காணிப்பதற்காக நாளாந்தம் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக, 500 மேலதிக அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை