இராமநாதபுரத்தில் இறந்து கரை ஒதுங்கிய 700 கிலோ நிறை கொண்ட புள்ளிச் சுறா மீன்
இராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கடற்கரையில் 18 அடி நீளமும் 700 கிலோ நிறையும் கொண்ட புள்ளி சுறா மீன், உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
பாக்ஜல சந்தி பகுதியான ஆற்றங்கரை கடற்கரையில் பிரம்மாண்ட மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டபோது, அதுவே வேல்ஸார்க் எனப்படும் அரியவகை சுறாமீன் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளமை தெரியவந்தது.
அதாவது இந்த சுறா மீன், ஆழ்கடல் பகுதியில் மட்டும் வசிக்கக்கூடிய குறித்த இனத்தைச் சேர்ந்தது எனவும் கப்பல்களில் மோதி காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் கருதுகின்றனர்.
சுமார் 700 கிலோ கிராம் எடையும் 18 அடி நீளம் கொண்ட குறித்த சுறா மீனை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டுவர முயற்சி செய்தனர். இயலாததால் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இழுத்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
அதைத் தொடர்ந்து உடற்கூற்று ஆய்வு செய்து இந்த மீன் இறந்ததற்கான காரணங்கள் குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
மேலும் இந்த ஆண் சுறா மீன் சுமார் 35 தொடக்கம் 40 வயதை உடையது எனவும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டமையினால், பாறையில் மோதி உயிரிழந்துள்ளதாக கால்நடை வைத்தியரின் பிரேத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை