ஜனாதிபதித் தேர்தலில் வகுத்த வியூகத்தில் பயணித்தால் பொதுத்தேர்தலில் தோல்வியையே சந்திக்க நேரிடும்- ரணில்

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வகுத்த வியூகத்தில் பயணித்தால், பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தோல்விதான் கிடைக்கும் என அந்தக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். ரணில் மேலும் கூறியுள்ளதாவது,  “இலங்கை வரலாற்றில் அனைத்து நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். தொடர்ச்சியாக நாடாளுமன்றில் இருந்துவரும் கட்சியாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தான் காணப்படுகிறது.

இதேபோல், இம்முறையும் நாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். நாம் தோல்வியடைந்தால்கூட பின்வாங்கியதில்லை. இந்நிலையில், இம்முறை பொதுத் தேர்தலில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றவே நாம் பிரதானமாக களமிறங்குகிறோம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம்.

மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். இன்று கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் காணப்படுகிறது. இதனை நாம் முறியடிக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு எமக்கு ஆட்சியதிகாரம் கிடைத்தது. 2019 ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ களமிறங்கினார்.

எனினும், நாம் பெரிய தோல்வியை தான் சந்தித்தோம். ஏன், இவ்வாறு நடந்தது?  இதிலிருந்து நாம் பாடத்தை கற்றுக் கொண்டுள்ளோம். 2019 ஆம் ஆண்டு வகுத்த வியூகங்களுடன் இனியும் முன்னோக்கி பயணிக்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாம் புதிய கொள்கையுடன் பயணிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையில் பயணிக்க வேண்டும்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்குப் பின்னர், எம்மால் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முடியாது என சிலர் நினைத்துள்ளார்கள்.

ஆனால், நாம் ஆட்சியதிகாரத்தை நோக்கித்தான் போட்டியிடுகிறோம் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா நிலைமையால் நாட்டின் அரசியல் தன்மையில் எல்லாம் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, பொதுத் தேர்தலில் நிச்சயமாக வெற்றிக் கொள்ள முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம்” என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.