ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடங்களை ஒன்லைன் மூலம் மேற்கொள்ளக் கூடிய வகையில் திட்டமிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை

தற்போது தயாரிக்கப்பட்டுவரும் புதிய ‘தேசிய கல்விக் கொள்கை’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தேசிய கல்விக்கொள்கையின் தற்போதைய நிலை பற்றி ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியது.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கு ஏற்ப ‘அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பு’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுவருகிறது.

எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டுக்கும், எதிர்கால தலைமுறைக்கும் தாக்கம் செலுத்தக்கூடியது என்பதால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

முன்பள்ளிகள் முதல் ஆரம்ப, இரண்டாம் நிலை, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி வரை அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கல்விக் கொள்கை தொடர்பான இறுதி அறிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் அதனை குறைந்தது சுமார் இரண்டு மாதங்கள் விரிவான சமூக உரையாடலுக்கு உட்படுத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் மூலம் அனைத்து முன்மொழிவுகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தி அது தொடர்பாக கிடைக்கப்பெறும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் உள்ளடக்கி இறுதி அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்த போதும் ஒன்லைன் கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செயலணி தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் இருந்த போதும் தற்போது தொழிநுட்ப பிரச்சினைகளையும் வெற்றிகொள்ள முடிந்துள்ளது. பாடசாலைகளைப் போன்று பல்கலைக்கழக மாணவர்களும் அதிக வீதத்தில் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டமையால் இம்முறைமையை எதிர்காலத்தில் மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இந்த தரவுகளை அடிப்படையாக கொண்டு ஒன்லைன் மூலமான உயர் கல்வித்துறையை பிரபல்யப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் போன்ற ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடங்களை ஒன்லைன் மூலம் மேற்கொள்ளக் கூடிய வகையில் திட்டமிடுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் மிக வேகமாக ஒன்லைன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளைப் பார்க்கிலும் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

ஒன்லைன் கல்வி முறைமைக்கு கலை பீட மாணவர்களிடமிருந்து எதிர்பாராதளவு சிறந்த பங்களிப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன் மூலம் கலைத்துறையில் கற்கும் மாணவர்களுக்கு தகவல் தொழிநுட்பம் தொடர்பான அறிவை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்த இலக்கை அடைந்துகொள்ள முடிந்திருப்பதாக பல்கலைக்கழக உபவேந்தர்கள் தெரிவித்தனர்.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் காலம் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவை எதிர்பார்த்திருக்கும் காலம் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாகும்.

அதனை பயன்படுத்தி ஆங்கிலம் மற்றும் கணினி தொழிநுட்ப அறிவை நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் பயிற்சிகள் ஆகிய மூன்று அமைச்சுக்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவருவதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஜனாதிபதி செயலணியிடம் வினவினார். அது மிகவும் பொருத்தமானது என்பது சில நிபுணர்களின் கருத்தாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.