வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் அறிவிப்பு!
வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து நாளை வெள்ளிக்கிழமை வணக்கத் தலங்களில் சமய வழிபாடுகளை கடைப்பிடிக்க முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வணக்கத் தலங்களில் ஆகக்கூடுதலாக 50 பேர் மட்டுமே சமய நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படுகின்றது. வழிபாடுகள் நடத்தும்போது இருவருக்கிடையேயான இடைவெளி ஒரு மீற்றர் இருப்பது கட்டாயமாகும்.
ஆலயத்தின் வாசலில் கைகழுவும் வசதிகள் கட்டாயம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் உள்நுழையும் வாசல்களைக் குறைப்பதனால் மக்களின் உள் நுழைதலைக் கட்டுப்படுத்தலாம்.
வழிபாட்டுத் தலத்தில் கடமையாற்றும் சமயப் பெரியார் எவராவது சுகவீனமுற்றிருந்தாலோ அல்லது காய்ச்சல், இருமல், தொண்டைநோ போன்ற அறிகுறிகள் காணப்பட்டாலோ அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர் பக்தர்களுடன் தொடர்புகொள்வது முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். நோய் அறிகுறிகள் காணப்படும் பக்தர்களும் ஆலயத்திற்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்.
தேவையேற்படும் பட்சத்தில் வணக்கத் தலத்திற்குள் உள்நுழையும் பக்தர்களின் எண்ணிக்கையை அருகிலுள்ள பொலிஸாரின் உதவியுடனும் கட்டுப்படுத்தலாம். அனைத்து பக்தர்களும் முகக் கவசம் அணிந்திருத்தல் கட்டாயமானதாகும்.
ஆலயத்தின் சமயப் பெரியாரும் பக்தர்களைச் சந்திக்கும் போது முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியமானதாகும். சமய வழிபாடுகளை வீடுகளில் செயற்படுத்துவதற்கு பக்தர்களை ஊக்குவிக்கவும்.
ஒரே குடும்பத்தினர் வழிபாடுகளோ தானங்களோ செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் பங்குபற்றுதல் மட்டுப்படுத்தப்படுவதுடன் அனைத்து சுகாதார விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உணவு வகைகளோ, தீர்த்த நீரோ அல்லது பிரசாதமோ எக்காரணம் கொண்டும் வழங்கப்படுதல் ஆகாது.
மேலும், இவ்வகையான உணவு வகைகளையோ புனித நீரினையோ பக்தர்கள் தாமாக எடுக்கும் வகையில் ஆலயத்தின் உள்ளேயும், வெளியிலும் வைத்தல் ஆகாது.
திருப்பலியின் போதான தேவநற்கருணை வழங்கும் செயற்பாட்டின்போது நாக்கில் வைப்பதற்குப் பதிலாக கைகளில் வைப்பது விரும்பத்தக்கது. பக்தர்கள் தேவ நற்கருணையினை உடனடியாகவே உள்ளெடுக்க வேண்டும். மேலும் திருப்பலியின்போது வைன் பரிமாறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகளின்போது குருமுதல்வரானவர் முகக் கவசம் அணிந்திருத்தல் அவசியமானதாகும்.
பொதுமக்கள் சமயத் தலங்களில் இயலுமான அளவு குறைந்த நேரத்தைச் செலவுசெய்வதுடன் தேவையற்ற விதத்தில் உலாவுவதைத் தவிர்க்க வேண்டும்.
சமயத் தலங்களுக்கான யாத்திரைகளும் குழுவாகத் தரிசித்தலும் தற்போதைய நிலைமைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு மாற்றீடாக தங்களுக்கு அண்மையிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சென்று வரலாம்.
மேற்குறித்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைத்துவிதமான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றுவது மிகவும் கட்டாயமானதாகும்” என அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.
கருத்துக்களேதுமில்லை