மிருசுவிலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: ஒருவர் காயம், நிறுவனமொன்றின் சொத்துக்கள் சேதம்!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது வாள்வெட்டுக் குழு ஒன்றினால் இரவுவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாள், இரும்புக் கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த கண்காணிப்புக் கமெராக்களை அடித்து உடைத்துள்ளனர்.

இதன்பின்னர், அங்கிருந்த பணியாளர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கையில் வாள்வெட்டுக்கு இலக்கானவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்த குறித்த கும்பல் பின்னர் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவம், தொடர்பாக உடனடியாகவே கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டபோதும் பொலிஸார் அதிகாலை 3 மணியளவிலேயே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.