போராட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லை- விமல்

நாடு கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில் போராட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லையென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டம் கலவரமாக மாறிய விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் தற்போதைய நிலைமை குறித்து சிந்திக்காமல், அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக முன்னிலை சோசலிச கட்சி போராட்டங்களை நடத்தியமை ஏற்புடையதல்ல.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் போராட்டக்காரர்களின் நோக்கம், பொலிஸாருக்கு இடையூறினை ஏற்படுத்தி அவர்களுக்கு  நோய்த் தொற்றை ஏற்படுத்துவதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த போராட்டத்தின்போது, குழப்பத்தினை ஏற்படுத்தியது  போராட்டக்காரர்களா அல்லது பொலிஸாரா என்பது அங்கிருந்த ஏனைய மக்களுக்கு தெரியும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சமூக இடைவெளியில் போராட்டம் நடத்தியவர்களை ஒன்றாக்கி கூட்டுக்குள் அடைப்பதற்கு முயற்சித்தது பொலிஸார்தான்.

அதாவது, அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை குழப்பி தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி பொலிஸார்  செயற்பட்டனர்.

இதுதான் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதின் அர்த்தமா” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.