தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதிக்குக் கடிதம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் நேற்று (வியாழக்கிழமை) அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், “தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற ஒரு குடையின் கீழ் அண்மையில் கூட்டுச் சேர்ந்திருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் 10 முதல் 15 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் 91 தமிழ் அரசியல் கைதிகளுக்காக நீதி வேண்டி இந்த மேன்முறையீட்டை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

எமக்குக் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மேன்முறையீடு செய்து அம் மேன்முறையீடுகளும் முடிவுற்று தண்டனையை அனுபவிப்போர் 29 பேர், குற்றவாளிகளாகக் காணப்பட்டு தற்போது மேன்முறையீட்டின் முடிவை எதிர்பார்த்திருப்போர் 17 பேர், குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களுக்கெதிரான விளக்கம் நடைபெற்றுக் கொண்டிருப்போர் 38 பேர், குற்றத்தை ஏற்று தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையில் இருப்போர் தொகை 7 பேர் என மொத்தம் 91 பேர் சிறையில் உள்ளார்கள் என்பதுடன் அவர்களுள் மிகப் பெருவாரியானவர்கள் 12 வருடங்களுக்கும் மேல் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, இயக்கம் சார்ந்த மேல் மட்டத் தலைவர்களான கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் கே.பத்மநாதன் போன்றோர் விடுவிக்கப்பட்டமையால் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாமும் விரைவில் விடுவிக்கப்படுவோம் என்ற ஒரு நியாயமான எதிர்பார்ப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு அப்போது இருந்தது.

பொதுத் தேர்தலின் பின்னரும் உங்கள் தலைமைத்துவக் காலத்தின் போதும் எமது தேசியப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அமைதித் தீர்ப்பைப் பெற குறித்த நாதியற்ற கைதிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதானது எமது தமிழ் மக்களிடையே நம்பிக்கையையும் நம்பத்தகுந்த ஒரு சூழலையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களை விடுவிக்க விசேட பொது மன்னிப்பு அவசியம் என்பதையும் மற்றவர்களை தங்களுக்கிருக்கும் அதிகாரம் மூலம் விடுதலை செய்யலாம் என்பதையும் வேண்டுமெனில் அது நீதிமன்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம் என்பதையும் நாம் அறிந்துள்ளோம். உங்களிடத்தில் இருந்து நல்ல தீர்மானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.