தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை- தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லையென ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2020 நாடாளுமன்ற தேர்தலுக்குரிய அஞ்சல் வாக்கு அடையாளமிடுவதற்கான நாட்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தலொன்று விடுக்கப்பட்டிருப்பதாகவும் சம்பிரதாய மற்றும் நவீன ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

தேர்தலுக்குரிய பணிகள் மேற்கொள்ளப்படும் நாட்களை குறிப்பதற்கான எந்தவொரு தேர்தல் ஆணைக்குழு பத்திரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

மேலும் அத்தகையதொரு ஆவணத்தை தயாரிக்கவும் இல்லை என விடய பொறுப்பு அலுவலர்களும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமும் எனக்கு அறிவித்துள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் ஊடக அறிவித்தல் ஒன்றின் மூலம் உறுதி செய்யப்படும் வரை இவ்வாறான நாள் குறித்தல்கள் பற்றிய செய்திகளை பரப்பாமல் இருக்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.