வடக்கில் கூட்டமைப்பு கோலோச்சும்! தெற்கில் ‘பெரமுன’ கொடி பறக்கும்!! – அடித்துக் கூறுகின்றார் பீரிஸ்
“நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும். ஆனால், தெற்கு உட்பட ஏனைய பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றி பெறும். அந்த வெற்றி வரலாற்று வெற்றியாகப் பதிவாகும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகின்றது. தமிழர்களின் பிரதிநிதிகளாக அவர்கள் இருப்பதால் ஒவ்வொரு தேர்தல் வெற்றியும் அவர்களுக்குச் சொந்தமாகின்றது. ஆனால், தெற்கு உட்பட ஏனைய பகுதிகளின் நிலைமை வேறு.
இந்தப் பகுதிகளில் கடந்த காலங்களில் வலுமிக்க தேசிய கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட்டன. ஆனால், இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர ஏனைய கட்சிகள் வலுவிழந்து போய்விட்டன. சிறந்த கட்சித் தலைவர்கள் இல்லாதபடியால் பெரும்பாலான மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறந்த தலைமைத்துவத்தையும் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதிய எதிர்காலத் திட்டங்களையும் கொண்டுள்ளது. எமது கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பலசாலிகள்; மக்கள் செல்வாக்கை அதிகம் கொண்டவர்கள்.
எனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெருவெற்றியீட்டியதைப் போன்று இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெறுவோம். அதாவது அதிக ஆசனங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை நாம் பெறுவது உறுதி” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை