இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்- பிரசன்ன

பலாலி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன்  விரைவாக  அபிவிருத்தி செய்யப்படுமென சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய அரசுடன் விரைவில் இலங்கை அரசு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ள இருக்கின்றது.

குறித்த உடன்பாட்டை ஏற்கனவே செய்து கொள்வதற்கு திட்டமிடப்படிருந்த நிலையில், கொரோனோ தொற்றினால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு மாறி வருகின்றமையினால், பாலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் கடந்த வருடம், பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா 30 கோடி ரூபாயை வழங்குவதாக உறுதியளித்திருந்தது.

அந்தவகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளவாறு, பலாலி விமான நிலையத்தின் முனையப் பகுதி, மின்சார வசதி, மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.