ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட செயலணி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஓர் புதிய பரிமாணம் – தமிழர் மரபுரிமைப் பேரவை
கிழக்கில் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஓர் புதிய பரிமாணம் என தமிழர் மரபுரிமைப் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதுக்கு உரித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தமிழர் மரபுரிமைப் பேரவை, “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கில் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாப்தற்காக 11 பேர் கொணட ஜனாதிபதி செயலணியை கடந்த ஆனி 2ம் திகதி நியமித்திருக்கிறார்.
முற்றுமுழுதாக பெரும்பான்மையினரை கொண்டமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி நாட்டின் பல்லினத்தன்மையை பிரதிநிதித்துவப்டுதத்வில்லை . இச்செயலணி நியமன விவகாரத்தினை, சிங்கள அரசின் சிங்கள-பௌத்தமயமாக்கல் (வடக்கு-கிழக்கு) அரசியல் நிகழ்ச்சி நிரலின் நீட்சியாகவே நோக்கவேண்டியுள்ளது.
ஈழத் தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியான வடக்கு-கிழக்கை துண்டாடி, தமிழ்த்தேச தாயக கோட்பாட்டை சிதைக்கும் அரசியல் செயற்பாடுகளை ஏற்னவே சிங்கள அரசு தொடங்கி காலம் காலமாக வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி தமிழர் நிலத்தை அபகரித்து வருகின்றது.
தமிழர் நிலத்தை அபகரிப்பதோடல்லாமல் தமிழர் மரபுரிமைகளை அழித்து திரிவுபடுத்தி சிங்கள-பௌத்த வரலாற்றியலையும், பூர்வீகத்தையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது எமக்குத் தெரியாததல்ல. முன்னர் வெவ்வேறு அரச நிறுவனங்களுக்கூடு மிகவும் பவ்வியமாகவும், நாசூக்காகவும் நடந்தவைகளுக்கு தற்போது ஜனாதிபதி செயலணி நியமன மூலம் நியாயாதிக்கம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பதவியேற்ற புதிய அரசு சிங்கள-பௌத்த அடையாளத்தை நாட்டின் அடையாளமாக ஊக்குவிப்பதில் தீவிர அடிப்படைவாதத்தை அகவயப்படுத்தி பெரும்பான்மை ஜனநாயகப் பொறிமுறையைக் கருவியாக பயன்படுத்தி வருகின்றது.
ஈழத்தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை தேச நீக்கம் செய்வதில் தொல்லியல் திணைக்களத்தினதும், வன பரிபாலன திணைக்களத்தினதும் பங்களிப்பு முக்கியமாக இருக்கின்ற போதும் தற்போது அமைக்கப்பட்டுள்ள செயலணியின் அதிகார வரம்பு சிங்கள-பௌத்த மயமாக்கல் செயற்றிட்டங்களை மிகத் தீவிரப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
சிங்கள தேசியவாதத்தில் பௌத்தம் என்றாலே சிங்களம், சிங்களம் என்றாலே பௌத்தம் என்கின்ற வரலாற்றுக் கோரிக்கை வரலாற்று வலுவின்மை சார்ந்தது எனத் தெரிந்தும், தொடர்ந்தும் பௌத்தத்தை சிங்கள இனத்துடன் மட்டும் இணைத்து ஆய்வு முயற்சிகளை ஊக்குவிப்பது தமிழ்ப் பௌத்தத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்றது.
ஈழத்தமிழ் பௌத்தம் வடக்கு-கிழக்கில் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்ற போதும், ஈழத்தமிழ் பௌத்த வரலாற்று, தொல்லியல் எச்சங்களை வெறுமனே சிங்கள-பௌத்த வரலாற்று எச்சங்களாக மாற்ற முனைவது சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் அடிப்டைக் கோரிக்கைகளை வலுவூட்டுவதாக அமையும். சிங்கள-பௌத்த பூர்வீகத்தின் இருப்பையும் தொல்லியலையும் சிங்கள-பௌத்தத்தின் வரலாற்று எச்சங்களாக பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழின இருப்பின் தேசத்திற்கான அடையாளங்களை வரலாற்று மலினம் செய்ய சிங்கள அரசு முனைகின்றது.
ஈழத்தமிழரை தேச நீக்கம் செய்வதன் மூலம் ஈழத்தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைத்து ஈழத்தமிழர்கள் தேசத்திற்குரியவர்கள் என்ற அரசியல் கோரிக்கையை நிராகரிக்க முயல்கின்றது. இச்செயலணி முற்றுமுழுதாக சிங்களவர்களை கொண்டமைந்திருப்பது தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை என்பது கண்கூடு.
இச்செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அச்செயலணியின் விடய நோக்கத்தை மாற்றாது என்பதோடு தமிழ், முஸ்லிம் நியமனங்கள் பெரும்பான்மை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயற்பாடாக அமைந்துவிடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ், முஸ்லீம் ஓரிரு பிரதிநிதித்துவங்கள் பெரும்பான்மை ஜனநாயகத்தின் அடிப்டையை ஒரு போதும் மாற்றப்போவதில்லை. சிறிலங்காவின் தலைநகரை மையப்படுத்தி எடுக்கப்படும் முடிவுகள் அதிகாரக் குவிவுமையம் ஒற்றையாட்சியில் தொடர்ந்தும் கொழும்பை மையப்படுத்தியே இருக்கும் என்பதுடன் அதிகாரப் பரவலாக்கத்திற்கான ஜனநாயக வெளியை இல்லாமற் செய்கின்றதென்றே கொள்ள வேண்டியிருக்கின்றது.
இச்செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான பனமூரே திலகவன்சதேரர் வடக்கு-கிழக்கின் பிரதான பௌத்தபிக்கு, கிழக்கு மாகாணத்தை சிங்கள-பௌத்த மயமாக்குவதில் அவருடைய பங்கு முக்கியமானது. திருகோணமலையில் புல்மோட்டை தொடங்கி அம்பாறை பொத்துவில் வரை பௌத்த விகாரைகள் அமைப்பதோடு சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டவர்.
இச்செயலணியின் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது இராணுவ மயமாக்கம் அரச நிறுவனத்தின் அலகுகளில் ஆழ ஊடுருவியிருப்பதற்கான ஓர் உதாரணம் மட்டுமே. மேலும் இதில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவ, மன்னார் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் நிபுணத்துவ ஆய்வாளராக பணியாற்றியவர், அவருடைய ஆய்வு முடிவுகளின் படி அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புகள் பண்டைய காலத்தவை எனக்குறிப்பிடுகின்றார்.
இச்செயலணியில் இவரது நியமனம் சிங்கள அரசுகளின் நிகழ்ச்சி நிரலை தெட்டத் தெளிவாக காட்டுகின்றது. இச்செயலணியின் நியமனம் வெறுமனே தமிழர்களின் இருப்பை, அடையாளங்களை, பூர்வீகத்தை மட்டும் குறி வைக்கவில்லை முஸ்லிம்களின் இருப்பையும் அடையாளங்களையும் குறி வைக்கின்றது. தமிழ், முஸ்லிம் உறவைப் பிரிப்பதற்கு சிங்கள அரசு பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டது, தொடர்ந்தும் கையாண்டு வருகின்றது.
வடக்கு-கிழக்கு தமிழ், முஸ்லிம் பரஸ்பர உறவு இரு இனத்தின் இருப்புக்கும் அத்தியாவசியமானது. தமிழ்த் தேசியம் முஸ்லிம்களை புறந்தள்ளி கட்டமைக்கப்படவில்லை என்பது வெள்ளிடைமலை. வடக்கு-கிழக்கை சிங்கள மயமாக்குவது முஸ்லிம்களின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும். தமிழ், முஸ்லிம் உறவை பலமாக மீளக்கட்டியெழுப்புவதன் மூலம் தான் சிங்கள-பௌத்த ஏகாதிபத்திய தேசியவாதத்திற்கெதிரான எதிர்ப்பை வடக்கு-கிழக்கில் காட்ட முடியும்.
இது தொடர்பில் முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்தும் அரச நிகழ்ச்சி நிரலுக்குள் முஸ்லிம் மக்கள் உள்வாங்கப்பட்டுவிடக்கூடாது என்பது எமது கோரிக்கையாக இருக்கின்றது. இன்னொரு தந்திரோபாயத்தை சிங்கள அரசு ஈழத்தமிழர் மீதும் முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்திருக்கின்ற நிலையில், வரலாற்றுத் தவறுகளுக்கு மீண்டும் இடமளிக்காது, இதற்கு எதிராக கூட்டாக ஒன்றிணைந்து போராட தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுக்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை