கொரோனாவால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை: மீளக் கட்டியெழுப்பவும் நிவாரணம் வழங்கவும் தீர்மானம்

சுற்றுலாத்துறை சேவையினை மீளக் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் தாக்கத்தின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை சேவையினை மீளக் கட்டியெழுப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று (வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சுற்றுலாத்துறை சேவையினை வழங்கும் நிறுவனத்தினர் கலந்துக்கொண்டார்கள்.

குறித்த சந்திப்பையடுத்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுலாப் பயணிகளுக்கான வீசா கட்டணம், உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை சேவை வழங்கல், வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டுக்கு வருகைத்தரும் போதும் சுற்றுலா மையங்களைப் பார்வையிடும் போதும் பின்பற்ற வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.

சுற்றுலாத்துறை சேவையில் ஈடுப்படும் நிறுவனங்கள் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை சேவையினைத் துரிதமாக கட்டியெழுப்புவது பிரதான இலக்காகும்.

சுற்றுலாப் பிரயாணிகளின் வீசாக் கட்டணத்தை 35 டொலருக்குள் வைத்துக்கொள்ளுமாறு குறிப்பிட்ட பிரதமர் சேவைத் துறையை துரிதமாக கட்டியெழுப்பவும், சேவையில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள பிரதான சுற்றுலா மையங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் சேவை வழங்குநர்கள் இவ்விடயத்தில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.