இராணுவக் கெடுபிடிகள் மீண்டும் அதிகரிப்பு: இம்முறை தமிழர்களின் வாக்களிப்பு வீதம் குறையும் அச்சம்- இரா.துரைரட்ணம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறையுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடிய வாய்ப்பு உள்ளது என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் யுத்த காலத்தைப் போன்று இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் குறிப்பிடுகையில், “புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் இராணுவ ரீதியான தலையீடுகள் அதிகரித்துள்ளதா என்ற சந்தேகம் இலங்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் எந்த அவசரகால நிலையினையும் அதிகாரிகள் சிறப்பான முறையில் கையாண்டுவந்துள்ளனர். ஆனால் தற்போது புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அனைத்து விடயங்களிலும் இராணுவ ரீதியான தலையீடுகளை ஏற்படுத்தக் கூடியவாறு குழுக்களை அமைப்பது என்பது மக்களின் ஜனநாயகத்திற்கு அடிக்கும் சாவு மணியாகவே கருதவேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கினைப் பொறுத்தவரையில் 35 வருட காலமாக இராணுவ ரீதியான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தபோது பல வழிகளிலும் இராணுவக் கெடுபிடிகள் காணப்பட்டன. இந்தநிலை யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஓய்ந்தது. இருந்தபோதிலும் தற்போது புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலத்தில் தமிழர்களின் வாக்களிப்பு வீதம் குறைந்த நிலையில் இருந்ததுடன் பின்னர் அது படிப்படியாக அதிகரித்தது. இன்று கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்களிப்பு வீதம் குறையுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈரலக்குளம் 201-A கிராமசேவகர் பிரிவில் பெரியமாதவணை, மாதவணை மயிலத்தமடு, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை 209-D கிராமசேவர் பிரிவிலுள்ள சின்ன மாதவணை, மயிலத்தமடு போன்ற பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை