மன்னார் புதையல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி
மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த சந்தேகநபர்களை, மன்னார் பதில் நீதவானிடத்தில் முன்னிலைப்படுத்தியப்போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில், புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெறுவதாக பேசாலை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அன்றைய தினம் இரவு 9 மணியளவில் குறித்த பகுதியில் பொலிஸாரினால் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 4பேரும் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மற்றும் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்கள் புதையல் எடுக்க பயன்படுத்திய நவீன கருவி ஒன்றையும் பொலிஸார் மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குறித்த 6 சந்தேகநபர்களிடம் பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் நேற்று மாலை மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த 6 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை