தேர்தலுக்குப் பின்னர் எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து முடிவு – அமெரிக்கா

ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் குறித்த முடிவு எட்டப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியாளர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், குறித்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவினை அமெரிக்கா மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது  ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமெரிக்கா காத்திருக்கிறது என்றும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறினார்.

அமெரிக்காவின் 480 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு கொண்ட மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போவதில்லை என அமைச்சரவை கடந்த பெப்ரவரி மாதம் முடிவு செய்தது.

மேலும் குறித்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று அதன் பரிந்துரைகளை சமர்ப்பித்ததாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அப்போது தெரிவித்திருந்ததுடன் அது அமைச்சரவையிலும் சமர்ப்பிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த ஒப்பந்தத்தில் சில உட்பிரிவுகள் இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கின்றது என்றும் அந்த குழு சுட்டிக்காட்டியிருந்ததாக பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.

எனவே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக் கூடாது என்றும் அதற்கு பதிலாக திருத்தப்பட்டு பொதுமக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறித்த குழு முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.