அரசுக்குப் பெரும்பான்மையை வழங்கத் தயார் தமிழர்களின் அபிலாஷை நிறைவேறுமாயின்! வவுனியாவில் தெரிவித்தார் சுமந்திரன்
புதிய அரசியலமைப்பில் எமது அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களிற்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த வேட்பாளர்களோடும் ஆதரவாளர்களோடும் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்று எமது கட்சியின் வவுனியா மாவட்ட குழுவினருடன் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது வன்னி மாவடத்திலே இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தோம்.
குறிப்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் மோசமான ஊடுருவல் நடவடிக்கைக்கு உள்ளாகி வருகின்றது. அரசுகள் மாறினாலும் அந்த செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று கொண்டுதான் இருக்கின்றது.
இப்படியான சவால் நிறைந்த காலத்தில் தான் நாம் ஒரு தேர்தலை சந்திக்கின்றோம்.எனவே வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பலத்தை ஒற்றுமையாக காட்ட வேண்டிய தேவை முக்கியமானதாக இருக்கின்றது.கூட்டமைப்பால் மாத்திரமே அந்த பலத்தை ஒருமித்துகாட்ட முடியும்.
கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை என்பது அப்பட்டமான பொய் பலவிடயங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.ஆனால் எதுவும் செய்து முடிக்கப்படாமல் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளதென்பதே உண்மை.
தற்போதைய ஆட்சியில் இருப்பவர்கள் என்ன மனோநிலையில் இருந்தாலும் அவர்களிடமும் இதைப்பற்றி பேசியிருக்கின்றோம். புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்று ஐனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
எனவே அதில் எமது அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். அது அரசாங்கத்திற்கான ஆதரவாக பலர் சொல்கிறார்கள். அது அப்படியல்ல அரசியலமைப்பை உருவாக்கி தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான ஆதரவே அது.
அத்துடன் 19வது திருத்த சட்டமானது ஒரு முதற்படியாகவே செய்யப்பட்டது. அது நிரந்தரமான சட்டமாக இருப்பது முடியாத விடயம். ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்து இயங்காவிட்டால் அது இயக்கமுடியாத அரச பொறிமுறையாகவே இருக்கும். அது மாற்றப்பட வேண்டும். ஆனால் எந்த திசையில் மாற்றப்பட வேண்டும் என்பதே கேள்வி. எனவே அதனை மாற்றும் போது எந்த திசையிலே நாடு பயணிக்க வேண்டும் என்ற முக்கியமான தீர்மானத்தோடு செயற்படவேண்டும்.
தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் எமது கட்சி ஆதரவாளர்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றோம்.மக்களுடைய பாதுகாப்பிற்கும் சுகாதாரத்திற்கும் எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லாத வண்ணமாக நாம் செயற்படவேண்டும்.
அதனாலேயே தேர்தலையும் பிற்போடுமாறு நாம் கேட்டிருந்தோம். இப்பொழுது இருக்கும் அபாயம் தொடர்பாக நாம் மிகமிக ஆதரவாகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றோம்” என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை