சலுகைகளுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை – மணிவண்ணன்

சலுகைகளை அனுபவிக்கவேண்டும் என்ற காரணத்துக்காக நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வரவில்லை. பதவியால் கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் மக்களிடமே வழங்குவோம் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோரை ஒன்றிணைத்து  நல்லூரில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது; ”2015ஆம் ஆண்டு  மஹிந்த ராஜபக்சவின் அரசு வீழ்த்தப்படும்வரை நாம் மக்களைச் சந்தித்துப் பேசக் கூட முடியாது. அவ்வாறு மக்களைச் சந்திக்க வேண்டுமாயின் மிக இரகசியமான சந்திப்புக்கள்தான் இடம்பெறும். குறைந்தளவானோர்தான் அந்தச் சந்திப்புக்களில் பங்கேற்பார்கள்.

அவற்றைத் தாண்டித்தான் நாம் இந்த இடத்துக்கு வந்துள்ளோம். அந்தக் காலப்பகுதியில் மே 18, மாவீரர் நாள் உள்ளிட்ட சிறப்பு நாள்களில் கஜேந்திரகுமார் அண்ணனின் வீடு சுற்றிவளைக்கப்படும். இராணுவம் பவள் கவச வாகனங்களைக் கொண்டுவந்து விட்ட நிகழ்வுகளும் உண்டு. நாம் ஆர்ப்பாட்டம் செய்யப்போனால் எமக்கு சேறு, ஒயில் கொண்டு தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடந்தன.

எமது பிரச்சினையை ஜெனிவாவுக்குச் சென்று பேசவேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டமைப்பிடம் எதிர்பார்த்தனர். எனினும் கூட்டமைப்பு பின்னடித்துவிட்டது.

அந்தவேளை, நானும் கஜேந்திரகுமார்  பொன்னம்பலமும் கட்சியின் பொதுச் செயலாளரும்தான் முதல்தடவையாக அச்சத்துடன் ஜெனிவா சென்றோம். நாம் நாடுதிரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து எம்மைக் கடத்துவார்கள் என்ற அச்சமும் எமக்கு இருந்தது.

இவ்வாறான நெருக்கடிகளின் மத்தியில் பயணித்து இன்று நாம் ஆலமரமாக விரிவடைந்துள்ளோம். இந்த 10 வருட கடினமான பயணத்தின் பயனை நாம் இம்முறை அடையவேண்டும்.

சலுகைகளுக்கு விலைபோகும் அமைப்பாக நாம் கட்டியெழுப்பமாட்டோம். அரசியல் இயக்கமாகத்தான் நாம் இதனைக் கொண்டு செல்வோம்.

சலுகைகளை அனுபவிக்கவேண்டும் என்ற காரணத்துக்காக நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வரவில்லை. எனவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வந்தால் நாம் எந்தவொரு சலுகையையும் பெற்றுக்கொள்ளமாட்டோம். வாகன வரிச் சலுகை அனுமதிப்பத்திரம் கிடைத்தால் அதனால் கிடைக்கும் நிதியை மக்களுக்கே வழங்குவோம்”  என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.