கிரானில் உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்து!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பாலத்தில் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
நேற்று மாலை கிரான் -புலிபாய்ந்தகல் வீதியால் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரமே இவ்வாறு ஆற்றினுள் பாய்ந்துள்ளது.
இதன்போது அப்பகுதியில் நின்றவர்களினால் உழவு இயந்திரத்தின் சாரதி காப்பாற்றப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரம் நீரில் முழ்கிய நிலையில் காணப்பட்டது.
கிரான் -புலிபாய்ந்தகல் வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் மிக மோசமான நிலையில் காணப்படுவதனால் இப்பகுதியில் தொடர்ச்சியான விபத்துகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கைகள் முன்வைத்த நிலையிலும் யாரும் கவனம் செலுத்தவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாதை கிரானில் இருந்து படுவான்கரைக்கு செல்லும் முக்கிய பாதையாகவுள்ள நிலையிலும் யுத்தம் நிறைவடைந்து இதுவரையில் சீரமைக்கப்படாத நிலையிலேயே உள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரண்டு வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் உள்ள இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துகளை எதிர்கொள்வதாகவும் இந்த பாதையினை உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு திருத்தியமைக்கமுன்வரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை