தமிழினத்தின் கவசம் போராளிகள்! அவர்களின் ஆதரவு எமக்குப் பலம்!! கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வரவேற்பு
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
‘தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கப் பல சக்திகள் செயற்படுகின்றன. தமிழ் மக்கள் தாயகத்தில் சுதந்திரமாக வாழ வேண்டுமானால் கூட்டமைப்பை நடைபெறவுள்ள தேர்தலில் பலப்படுத்த வேண்டும்’ – என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் இரா.சம்பந்தன் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ் மக்களின் பலம் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. அதற்கமைய தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் களமிறங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதன் ஊடாகவே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற உண்மை நிலையை ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் உருவாக்கப்பட்டது என்ற உண்மை நிலையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அன்று தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆயுதமேந்திப் போராடிய அவர்கள், இன்று ஜனநாயக வழியில் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடும் எமக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமையை நாம் வரவேற்பதுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
அவர்களின் விருப்பத்துக்கு – வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவையும் பலத்தையும் வலுப்படுத்த வேண்டும்” – என்றார்.
…………………
கருத்துக்களேதுமில்லை