முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு 3 முக்கிய விடயங்கள் நாட்டில் இருக்க வேண்டும்- மங்கள சுட்டிக்காட்டு
ஜனாதிபதி கூறுவது போன்று முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பன காணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் பொருளாதார சீர்குலைவிற்கு கடந்த 7 மாதங்களாக இடம்பெற்ற முறையற்ற நிர்வாகமே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அதற்கு மத்திய வங்கி ஊழியர்களும், கொவிட்-19 தொற்றும் காரணமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை மத்திய வங்கியின் உத்தியோகத்தர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
அந்தச் சந்திப்பில் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைக்குமாறு உத்தியோகத்தர்களைக் கடுந்தொனியில் அறிவுறுத்தினார். இத்தகைய பின்னணியிலேயே மங்கள சமரவீர இதுகுறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவில் குறிப்பிடுகையில், “நாட்டின் பொருளாதார சீர்குலைவிற்கு ஜனாதிபதி மத்திய வங்கி மீதும், கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் மீதும் குற்றஞ்சுமத்துகின்றார்.
ஆனால், உண்மையில் கடந்த 7 மாதங்களாக சீராக ஒழுங்கமைக்கப்படாத நிதிக்கொள்கை மற்றும் தவறான பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றின் விளைவே இந்த பொருளாதாரச் சீர்குலைவாகும். குறிப்பாக இந்த நெருக்கடியைத் தூண்டியது கடந்த டிசம்பர் 19 இல் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடாத வரி இடைநிறுத்தங்களேயன்றி, கொவிட்-19 அல்ல.
இதேவேளை, முதலீடுகள் தேவை என ஜனாதிபதி கூறுவது மிகவும் சரியானதே. இன்றவளவில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பனவே முதலீட்டாளர்களைக் கவர்ந்துகொள்வதற்கு அவசியமேயன்றி எதேச்சதிகாரம், இராணுவமயமாக்கல் மற்றும் முதலாளித்துவம் என்பவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்துக்களேதுமில்லை