தமிழர்கள் தேர்தலை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்- உருத்திரகுமாரன்
இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் தொடர்பாக கொள்கை முடிவுகளே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளாக எடுத்து வருகின்றது.
அந்தவகையில் எம்மைப் பொறுத்தவரை தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை.
மேலும் இலங்கையின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பத்து வீதத்துக்கு குறைவானவர்களே தமிழர்கள் உள்ளனர். இதனால் நாடாளுமன்றத்துக்கு சென்று எதனையும் சாதிக்க ஒருபோதும் முடியாது.
கடந்த காலங்களை பார்ப்போமேயானால், 1972ம் ஆண்டு அரசியலைமைப்பு சட்டம் கூட தமிழ்மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டது. அதேபோன்று 1978 ம் ஆண்டிலும் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டது.
அத்துடன் ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த வல்லுனர் குழுவின் அறிக்கையும் கூட, தமிழ் மக்கள் தமது இன அடையாளத்தின் அடிப்படையில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகப் புறந்தள்ளப்பட்டு வந்தமையே ஆகும்.
இவ்வாறு இனப்பிரச்சனையின் அடிப்படையாக இருந்துவந்த காரணத்தினால், இன்றும் தொடர்ந்து கொண்டு போகும் புறந்தள்ளல் வகையிலான கொள்கைகள் மிகவும் ஆபத்தானவை என இலங்கை அரசியல் நீரோடையில் தமிழர்களின் பங்களிப்புக்கான காத்திரமான இடம்இல்லை எனத் தெரிவித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இலங்கை ஒரு பௌத்த இனவாத இறுகிய இனவாத கட்டமைப்பாகும். அதற்குள் தமிழர்களுக்கான அரசியல் வெளியே இல்லை. இதன் காரணமாகத்தான் ஆயுதப் போராட்டமே தொடங்கியது. அதனால்தான் நிகழ்வுபூர்வமான ஒர் அரசினை நிறுவினோம்.
எனினும் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களை நாம் பயன்படுத்த வேண்டும். எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அதனை ஒரு கருவியாக கையாளவேண்டும்.
இந்த தேர்தல்களில் பங்கெடுக்கின்ற தமிழர்கள், தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச் செல்கின்றவர்களாக இருக்க வேண்டும். மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமையினைத்தான் தேர்வு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை