கருணாவை உடனடியாகக் கைது செய்யுங்கள்: சிங்கள ராவய ஜனாதிபதியிடம் கோரிக்கை
இனப்படுகொலை செய்துள்ளதாக கருணாவே கூறியுள்ளார். ஆகவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கோரியுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மாகல் கந்தே சுதத்த தேரர், கருணா அம்மானைக் கைது செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, வன்னியில் இடம்பெற்ற போரின்போது 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் தாம் படுகொலை செய்ததாக கருணா அம்மான், பகிரங்கமாகத் தெரிவித்துள்ளமையை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தாம் கொன்ற படையினரின் எண்ணிக்கையைக் கூறிப் பெருமையடைவதுதான் கருணா அம்மான், ஜனாதிபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கூறும் முறையா என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து டுவிட்டரில் பதிவொன்றிட்டுள்ள அவர், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜனாதிபதி அவர்களே. எத்தனை படையினரை தாம் கொன்றோம் என்றுகூறி, அதுகுறித்துப் பெருமையடைவதுதான் ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கருணா அம்மான் வாழ்த்துத் தெரிவிக்கின்ற முறையா?” என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கருணாவினால் கூறப்பட்ட கருத்துக்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் தென்னிலங்கை மக்களிடத்திலும் குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை