முரண்பாடு இல்லாத ஜனாதிபதி-பிரதமர் ஆட்சி: மக்களே ஆணை தரவேண்டும்- மஹிந்த
ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடற்ற விதத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலைமை மக்கள் மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தனிப்பட்ட குடும்பத்தை இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது எனவும் அதனை மாற்றியமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகலை – வாரியபொல பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் கூறுகையில், “நல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரம் மீண்டும் எம்மால் பலப்படுத்தப்படும். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு தேவையற்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன.
2019ஆம் ஆண்டு பலவீனமான பொருளாதாரத்தைக் கொண்ட ஆட்சியை மீண்டும் பொறுப்பேற்றுள்ளோம். இந்த சவாலை வெற்றிக்கொள்ளத் தாயாரா உள்ளோம்.
தேசிய பொருளாதார வீழ்ச்சியினால் பல துறைகளில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு உடன் செல்வதற்கு முயற்சித்தோம். ஆனால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் அதற்குத் தடையாக இருந்தது. நெருக்கடியான நிலையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க கடன் பெறும் எல்லையை அதிகரிக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கடன் பெறும் எல்லையை அதிகரிக்கும் யோசனைக்கு எதிர்த் தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை.
ஆகவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் அரச நிர்வாகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லமுடியாது என்ற நிலை உறுதியானது. இந்நிலையில், இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடற்ற விதத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலையை மக்கள் மீண்டும் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை