கூட்டமைப்பை பலமிழக்கச் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்கச் செய்வதற்குப் போராளிகளாகிய நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம். உரிமைக்காகவும், தேசியத்திற்காகவும் குரல் கொடுப்போம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசியத்திற்காகப் போராடிய நாங்கள், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இதற்குக் காரணம் 2001 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தலைவர் உருவாக்கினார். இதனை தற்போது ஒரு சிலர் மறுதலித்துப் பேசலாம்.
ஆனால் தலைவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தான் தேசியத்திற்காகக் கதைக்கும் ஒரு கட்சியாக அவர் நியமித்தார்.
யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் நீரோட்டத்தில் இணைந்த நாம் குறிப்பிட்ட சில வருடங்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணத்தில் இணைந்து செயற்படுகின்றோம். கடந்த மூன்ற வருடங்களாக நெருங்கிய நிலையில் செயற்பட்டு வருகின்றோம்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு உள்ளுராட்சி மன்றத்திற்கான ஆசனப் பங்கீடுகளை மேற்கொண்டது. அதேபோன்று தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும், கிழக்கில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வேட்பாளர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு ஆசன ஒதுக்கீட்டினைத் தந்தது.
இருப்பினும் எமது ஒற்றுமை காரணமாகவும், தேசியம் தொடர்பிலான எமது பற்று காரணமாகவும் தற்போதைய நிலையில் தரப்பட்ட ஆசன பங்கீட்டினை விட்டுக் கொடுத்து செயற்படுகின்றோம்.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதற்காகப் பல கட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எமது போராளிகளைப் பயன்படுத்தியும் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் எமது கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் எப்போதும் தமிழ்த் தேசியத்தினோடே பயணிப்போம். எதிர்வரும் காலங்களிலும் எமது பிரதிநித்துவங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஏற்படுத்தப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். அதனை பலமிழக்கச் செய்ய முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்கச் செய்வதற்குப் போராளிகளாகிய நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம். உரிமைக்காகவும், தேசியத்திற்காகவும் குரல் கொடுப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெல்ல வைப்போம்” என்று தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை