தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தால் அது தமிழர்களின் தோல்வி – ஜனா

தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தோல்வியடைந்தால் அது தமிழர்களின் தோல்வியாகவே கருதப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  “இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நான்கு ஆசனங்களை பெறவேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களின் அரசியல் குரலாக தமிழ் மக்களின் தேவைக்காக இன்று வரை பல வழிகளிலும் போராடிக்கொண்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தட்டிக் கேட்பதற்கும் அதற்கொரு நிரந்தர தீர்வை உருவாக்குவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒரு பேரம் பேசும் சக்தியாக வடகிழக்கில் திகழவேண்டிய தேவை இருக்கின்றது.

30வருடத்திற்கும் மேலான எங்களுடைய அரசியல் போராட்டம் ஆயுதப் போராட்டம் காரணமாக இலட்சக்கணக்கான மக்களையும் போராளிகளையும் பொருளாதாரம், கல்வி,கலாசாரம் அனைத்தையும் நாங்கள் இழந்திருக்கின்றோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் குரலாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒலித்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு நிரந்தர விடிவை தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் எமது ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்ததாகவே கூறலாம். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தோல்வியடைந்தால் அது தமிழ் மக்களின் தோல்வியாகவே கருதப்படும்.

தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு தீர்வைப் பெற்று தலைநிமிர்ந்து வாழவேண்டுமானால் தமிழ்த் தேசியம் வெல்ல வேண்டும். தமிழ் மக்கள் வெல்ல வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வெல்ல வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் வென்று வடக்கு கிழக்கில் 20ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கைப்பற்ற வேண்டும். அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்து அதன் கரங்களை பலப்படுத்தி ஆயுதப் போராட்டம் மௌனித்தாலும் அரசியல் போராட்டம் வெற்றியளிப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து பாடுபட்டு எமக்காக உயிர் நீத்த அனைத்து ஆத்மாக்களின் சாந்திக்காக ஒருமித்து குரல் கொடுத்து பாடுபட வேண்டும்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒருமித்து வாக்களித்து நான்கு பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெற்றுத் தரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.