மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளின் போது அரசியல் தலையீடு – மஹிந்த குற்றச்சாட்டு!
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளின் போது அரசியல் தலையீடு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொல்கஹவெலயில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அன்று பிரதமரின் செயற்பாடுகளை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கே நட்டம் ஏற்பட்டது. நாம் ஆரம்பித்த விடயங்களை முன்னெடுத்துச் சென்றனர். புதிதாக எதனையும் ஆரம்பிக்கும் இயலுமை அவர்களுக்கு இருக்கவில்லை.
அதிவேக வீதியையும் நாம் திட்டமிட்டிருந்தோம். ஒப்பந்தம் வழங்கியிருந்தோம். ஒப்பந்தக்காரர்கள், இரண்டு மூன்று பேரை நீக்கி, ஒப்பந்தம் ஒரு அமைச்சருக்கும் நிறுவனமொன்றுக்கும் வழங்கப்பட்டது.
அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பகுதியில் எதுவும் இடம்பெறவில்லை. நான் அண்மையில் அங்கு கண்காணிப்பு விஜயம் செய்தேன். அமைச்சரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பகுதியே மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
அரசியல் தேவைகளுக்காக அந்தப் பகுதியை வழங்கியமையினால், நாட்டு மக்களுக்கு இன்று நட்டம் ஏற்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை