கருணா குறித்து பேசுபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்களை மறந்துவிட்டனர் – மஹிந்த
முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை அரசியலாக்கும் எதிர்தரப்பினர், விடுதலைப் புலிகளுக்கு யார், ஆயுதம் வழங்கியது என்பதை மறந்து விட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு, கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல, அனைவருக்கும் தெரிந்ததே என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குளியாப்பிட்டியவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “சவால்களை எதிர்கொள்ள முடியாதவர் சிறந்த தலைவராக செயற்பட முடியாது. நாம் ஆட்சி அதிகாரத்தை பெறும்போதெல்லாம் சவால்கள் அதிகரித்ததாகவே இருந்தது.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம். தற்போதும் பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வெற்றிப் பெற்றுள்ளோம்.
கருணா அம்மான் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை தற்போது எதிர்தரப்பினர் தங்களின் அரசியல் பிரசாரங்களுக்கு முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
ஆனால் விடுதலை புலிகள் அமைப்பு பலம் பெறுவதற்கு ஆயுதம் வழங்கிய நபர் தொடர்பில் கருத்துரைப்பது இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்டது. பலம் வாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன .
அந்த ஆயுதங்களைக் கொண்டே விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவத்தினரை கொன்றார்கள். கருணா அம்மானின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல, அனைவரும் அறிந்ததே.
வரலாற்று ரீதியில் பெருமைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளினால் கட்சி பலவீனமடைந்துள்ளது.
ஆகவே நாடாளுமன்றத்தில் பலம் மிக்க கட்சி நிலையான அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும். நாட்டுக்கு சேவையாற்றுபவரை மக்கள் இம்முறை தமது பிரதிநிதியாக தெரிவு செய்ய வேண்டியது அவசியமாகும்” என மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை