தமிழர்களிடம் வாக்குக் கேட்பதற்கு தேசியக் கட்சிகளுக்கு அருகதையில்லை – சி.வி.கே.சிவஞானம்
தமிழர்களின் அனைத்து விடயங்களிலும் காலை வாருகின்ற செயற்பாட்டைமுன்னெடுக்கும் தென்னிலங்கை தேசியக் கட்சிகள் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு அருகதை இல்லை என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் தென்னிலங்கையைச் சேர்ந்த தேசியக் கட்சிகளின் அதிக்கம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தின் ஊடாக அவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது அவர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது எனினும் தண்டணை விதிக்கப்பட்டு சில காலங்களிலேயே சிறையில் இருந்த இராணுவ அதிகாரி ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் 25 வருடங்களுக்குமேலாக தமிழ் அரசியல் கைதிகள் சிறையில்அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மீது எவ்வித வழக்கு விசாரணைகள் இன்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரன் என்ற அரசியல் கைதியின் பிள்ளைகள் தாயை இழந்து அநாதரவாக இருக்கின்றபோதும் இன்று வரை தென்னிலங்கை அரசு அவரை விடுவிப்பதற்கு மறுத்து வருகின்றது. ஆனந்தசுதாகரனின் விடுதலையை தென்னிலங்கை தேசியக் கட்சிகள் கூட வலியுறுத்த அளுத்தம் கொடுக்க முன்வரவில்லை.
தமிழர்களுக்கு ஒரு நீதி இராணுவத்தினருக்கு ஒரு நீதி என்றே இந்த நாடு பயணிக்கின்றது தமிழர்களின் இனப்பிரச்சினையில் கூட சிங்கள அரசு அக்கறையற்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.
கடந்த நல்லாட்சி அரசிலும் கூட இனப்பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் இடம் பெற்றது. அந்தப் புதிய அரசியல் அமைப்பு பல தடைகளையும் தாண்டி நிறைவேற்றுவதற்கு தமிழர் தரப்புக்கள் முயற்சித்தபோதும் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியும் அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதமரும் இதற்குத் தாங்கள் பொறுப்பில்லை என்று கைவிரித்து விட்டார்கள்.
இவ்வாறு தமிழர்களின் அனைத்து விடையங்களிலும் காலை வாருகின்ற செயற்பாட்டைமுன்னெடுக்கும் தென்னிலங்கை தேசியக் கட்சிகள் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு அருகதை இல்லை” என்றார்.
கருத்துக்களேதுமில்லை