வெள்ளை வான் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிடியாணை

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வௌ்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவத்தின் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான்  நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த இரு சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால், அவர்களுக்கு எதிராக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்றில், வெள்ளை வான் சாரதிகளாக இவர்கள் இருவரும் தங்களை அறிமுகப்படுத்தி இருந்தனர்.

அதாவது, இதில் ஒருவர் வெள்ளை வான் சாரதியாக கடமை புரிந்ததாகவும் மற்றையவர் புலிகள் ஆதிக்கம் செலுத்திய இடங்களில் இருந்து தங்கங்களை எடுத்து வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் இவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறு இவர்கள் வெளிப்படுத்திய கருத்து பெரும் சர்ச்சையை அனைவரது மத்தியிலும் ஏற்படுத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்தே குற்றப்புலனாய்வு பிரிவினர் இவர்களுக்கு எதிரான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.