அரசாங்கத்தை விட தமிழ் மக்கள் தான் முக்கியம் – பிரபா கணேசன்
தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படுமேயானால் நிச்சயமாக அரசாங்கம் சார்பாக இருக்க மாட்டேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட தலைமை வேட்பாளருமான க.பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியா – தரணிக்குளத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், “தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படுமேயானால் நிச்சயமாக இந்த அரசாங்கம் சார்பாக இருக்க மாட்டேன். எனக்கு அரசாங்கத்தை விட எமது தமிழ் மக்கள் தான் முக்கியம் என்பதை இந்த இடத்திலே தெரிவித்து கொள்கின்றேன்.
அதேபோல் கருணா அம்மான் பிரச்சினையை பொறுத்தவரை அவர் எங்களது இயக்கத்தின் பிளவுக்கும், இயக்கத்தின் இன்றைய நிலைக்கும் காரணமாக இருந்தவர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே அவர் இன்று அரசியலுக்காக, தான் ஒரு வீர மகன் என்பதை வெளியே காட்டுவதற்காக ஒரு உணர்ச்சிவசப்பட்டு பேசிய அந்த வார்த்தைகள் பெரும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது.
ஆகவே இன்று நல்லிணக்கமாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலே இப்படியான இனத் துவேஷங்களை உருவாக்கக்கூடிய இப்படியான சொற்பதங்கள் பாவிப்பதனை நிச்சயமாக அனைவரும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மிலேனியம் சவால் உடன்படிக்கையை பொறுத்தவரையிலே கடந்த அரசாங்கம் அதனை ஆரம்பித்து வைத்திருக்கிறது.
ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இன்றைய அரசாங்கம் கைச்சாத்திட இருக்கிறார்கள். பல திருத்தங்களை கொண்டுவர இருப்பதாக கூறுகின்றார்கள்.
நாட்டின் இறையாண்மைக்கு தகுந்த முறையில் என்னென்ன திட்டங்களை அவர்கள் போடுகின்றார்கள் என்பதை பொறுத்துதான் நிச்சயமாக இதைப் பற்றி எனக்கு தெளிவான ஒரு விளக்கத்தை கொடுக்க முடியும்.
உண்மையிலே என்னுடைய அரசாங்கம் வரும்பொழுது எனது வெற்றிக்கு பின்பு நிச்சயமாக இந்த மக்களின் அவலங்களை முழுமையான முறையிலே தீர்த்து வைக்கக்கூடிய ஒரு முழுமையான திட்டத்தை நான் கொண்டிருக்கின்றேன்”என மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை