மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று திறக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று (சனிக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது.

இலங்கையில் மார்ச் மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு அங்கமாக இலங்கையில் சினிமா திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்நிலையில் நாடு ஓரளவு வழமைக்கு திரும்பியுள்ளதன் அடிப்படையில், குறித்த சினிமா திரையரங்குகள் இன்றுமுதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

குறித்த மீள் திறப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சின்  செயலாளர் பந்துல ஹரிச்சந்திர, கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் சினிமா திரையரங்குகள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து திரையரங்கங்களும் கிருமி தோற்று நீக்கத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அனைத்து பார்வையாளர்களும் இலங்கை சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தென்னிந்திய திரைப்படங்கள் இலங்கையில் அதிகமாக திரையிடப்பட்டு வந்த நிலையில், தற்போது திரைப்பட வெளியீடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை திரையரங்குகளில் எவ்வாறான திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் என்பது தொடர்பான எவ்வித அறிவித்தல்களை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.