மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரன் வாக்கு கேட்கிறார்- தவராசா

சீ.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்து விட்டு, இப்போது மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றாரென முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே தவராசா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண சபை தேர்தலின்போது, தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கில் இருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றுவோம் என முழக்கம் இட்டனர். ஆனால் ஒரு இராணுவ சிப்பாயை கூட அவரால் வெளியேற்ற முடியவில்லை.

இவர்கள் இதனைதான் செய்யவில்லை என்று பார்த்தால், வடக்கு மாகாண சபைக்கு கிடைத்த பெருமளவான அபிவிருத்தி நிதியை குறித்த திட்டத்திற்கு தனது உறவினரை நியமிக்கவில்லை என்பதற்காக அந்த நிதியை திருப்பி அனுப்பிய அரசியல்வாதிதான் இவர்.

மாகாண சபையினை ஆட்சி செய்தபோது மக்களுக்கு எதனையும் செய்யாத இவர், இலங்கைக்கு முதல் தடவையாக பாரத பிரதமர் மோடி வருகைதந்தபோது, தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி எவையும் பேசாது, இந்தியாவில் பல பெண்களை சாமியார் என்ற போர்வையில் கற்பழிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமானந்தா என்ற சாமியாரை விடுவிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

வடக்கு மகளுக்கு பல ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க கற்பழிப்பு சாமியாரை விடுவிக்க வலியுறுத்தி மோடிக்கு கடிதம் கொடுத்தார். இதுதான் மாகாண சபையில் ஆட்சியில் இருக்கும்போது ஆற்றிய பணி.

வடக்கு மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்து விட்டு இப்போது மீண்டும் ஐந்து வருடங்களை வீணாக்கவா தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.